Sunday, May 22, 2011

*சிறந்த கலைஞர்

          ஒவ்வொரு சிறு விஷயத்திலும் சுவாமிஜி அதிக கவனம் செலுத்தினார்கள். இதனை விளக்க ஒரு சில சான்றுகள் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். ரேடியோவை இயக்க ஒரு விசேஷ சாதனம் சுவாமிஜி வைத்திருந்தார்கள். அது அவருடைய படுக்கை அறையில் உள்ள அலமாரியில் இருக்கும். 32 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் உபயோகித்த பின் அதனை சுவாமிஜி அதே இடத்தில் வைத்திருந்தார்கள்.
     
     சுவாமிஜியின் அறையில் ஒவ்வொரு பொருளும் அதற்கென்று ஒதுக்கப்பட்ட இடத்திலேயே வைக்கப்பட்டிருக்கும். எக்காரணத்தைக் கொண்டும் இடத்தை மாற்றமாட்டார்கள். வெளிச்சம் இல்லாவிட்டாலும் சுலபமாக வேண்டிய பொருளை  சுவாமிஜியோ அல்லது அவர்களோடு நெருங்கிப் பழகினவர்களோ எடுத்துவிடலாம். விருந்தினர் உபயோகத்திற்கென்று வரவேற்பறையில் போடப்பட்டிருந்த நாற்காலிகள் விருந்தினர்கள் உபயோகித்த பின் சிறிது இடம் மாறியிருக்கும். விருந்தினர்கள்  சென்றபின் நாற்காலிகளை ஒழுங்குபடுத்தி பழைய  இடத்தில் வைத்துவிடுவார்கள்.
 
          'தன் கையே தனக்குதவி' என்னும் பழமொழிக்கு நமது சுவாமிஜியே சிறந்த எடுத்துக்காட்டு. சுவாமிஜி உபயோகிக்கும் கழிவறை, முகங்கழுவும் சாதனம் (Wash Basin) ஆகியவற்றைத் தானே சுத்தம் செய்வார்கள். வரவேற்பறை, படுக்கையறை ஆகியவற்றை சுத்தம் செய்தல், ஒழுங்குபடுத்துதல் முதலியவற்றை சுவாமிஜியே செய்வார்கள். தனது சிஷ்யர்களையோ பணியாட்களையோ  இவற்றை செய்ய அனுமதிக்கமாட்டார்கள். சுவாமிஜி உபயோகிக்கும் கழிவறை புதிதாக வாங்கியது போல் அவ்வளவு சுத்தமாக எப்போதும் இருக்கும்.
 
          கட்டடக்கலையில் நமது சுவாமிஜி தலைசிறந்து விளங்கினார்கள். பொறியியல் நிபுணர்களும், கொத்தனார்களும் சுவாமிஜியின் ஆலோசனைப்படியே கட்டிடங்களைக் கட்டுவார்கள். திருப்பராய்த்துறை, திருவேடகம், சித்திரச் சாவடி, சேலம் ஆகிய இடங்களில் கட்டிருக்கும் கட்டடங்களே சுவாமிஜியின் திறமைக்குச் சான்றாகும். இயந்திரங்களைப் பற்றிய ஞானமும் நமது சுவாமிகளுக்கு உண்டு.  சினிமா காட்டும் இயந்திரத்தில் உள்ள சிறு சிறு குறைபாடுகளை சுவாமிஜியே நீக்குவார்கள். கடிகாரத்தின் பாகங்களைப் பற்றி நன்கு அறிவர். சில குறைபாடுகளை சுவாமிஜியே நீக்குவார்கள். சில வேலைகளுக்கு வேண்டிய உபகரணங்களை சுவாமிஜியே தயாரிப்பார்கள். நீச்சல் குளத்தில் மாணவர்களை மிதக்கும்படி செய்ய மிட்டாய் அடைத்துவரும் தகரத்தை உபயோகித்து மிதப்பு செய்தார்கள். கழிவறை கழுவுவதற்குத் தேங்காய் மட்டையிலிருந்து ஓர் உபகரணத்தைச் செய்தார்கள். சமையல் கலைகளிலுள்ள நுணுக்கங்களை மாணவர்களுக்கு சுவாமிஜி போதிப்பார்கள்.

No comments:

Post a Comment