Tuesday, October 23, 2012

*சக்தி பூஜை(“கடவுளின் வடிவங்கள்” புத்தகத்தில் அம்பிகை என்ற தலைப்பின் கீழ் சுவாமி சித்பவானந்தர் கூறியுள்ள கருத்துக்கள் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை முன்னிட்டு இங்கு பதிவேற்றப்பட்டுள்ளது.)
          
போஜனம் பண்ணுபவர்க்குப் பசிப்பிணி போம்; தேகம் திடம் பெறும். அவ்வாறே சக்திபூஜை பண்ணுபவருக்கு சக்தி வலுக்கும். காரியத்தைக் கொண்டு காரணத்தை நிர்ணயிக்கலாம். உலகத்தில் மேன்மையனைத்தும் பெற்று இன்புற்றிருப்பவர்களே சக்திமான்கள் ஆவர். முறையுடன் சக்தியைப் பயன்படுத்துதல் பூஜையின் முடிவான நோக்கம். இக்காலத்தவர்களுள் விசேஷமாக மேல்நாட்டவர் சக்தியின் ஜட சொரூபத்தைப் பெரிதும் போற்றுகின்றனர். நீராவி, மின்சாரம், ரேடியோ (தற்காலத்தில் கைப்பேசி மற்றும் கணினி)முதலியன ஜடசக்தியின் அம்சங்களாகின்றன. அவைகளின் தத்துவங்களை நன்கு அறிந்திருக்கும் பௌதிக சாஸ்திரிகள் அவைகளைக்கொண்டு நானாவித நன்மைகளை எய்துகின்றனர். யந்திரங்களின் வாயிலாக மனிதனுக்கு வேண்டிய சௌகரியங்களையெல்லாம் ஜடசக்தி செய்து வைக்கின்றது.
          
வெறும் வெளிச்சடங்கும் ஆடம்பரமும் பூஜையாய்விடாது என்பதை இக்காலத்திய இந்தியர்கள் தங்கள் வாழ்வின் மூலம் காட்டிவிட்டனர். பராசக்தியை அவர்கள் போற்றும் கோலத்தை நாடெங்கும் காணலாம். ஆனால் உலகில் உள்ள சமுதாயங்களில் இந்தியர்கள்தான் இப்போது சக்தியற்றவர்களாகக் கிடக்கின்றனர். பராதீனமும், தம் காரியத்தைத் தாமே நிர்வகித்துக்கொள்ள இயலாதிருப்பதும் சக்தி உடைத்திருப்பதற்கு அறிகுறிகளாகா. பூஜா விதியில் சடங்கு சரீரம் போன்றது; மனோபாவனை ஜீவன் போன்றது. பாவனையும் உணர்ச்சியும் அற்ற சடங்கு உயிரற்ற உடல் போன்றதாகும். இப்போது இந்தியர்களிடத்தில் உள்ள குறைபாடு இதுவேயாம். உயிர் மெலிந்து கிடக்க உடலை மட்டும் அவர்கள் அலங்கரித்து வருகின்றனர். சிலர் உடலாகிய சடங்கையும் அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்கின்றனர். ஆனால் அது முறையன்று. உடலின் வாயிலாக உயிர் மிளிரும்படி செய்ய வேண்டும். சடங்கின் மூலம் சக்தியின் கூறுபாடுகளாகிய தேக வலிவும் மனத்திட்பமும் பெறுதல் அவசியம். இதுவே சக்தி பூஜையின் அடிப்படையான நோக்கமாகும்.
          
மேல் நாட்டவர்போன்று இந்தியர் ஜடசக்தியை முழுதும் பயன்படுத்திக்கொள்ளக் கற்க வேண்டும். ஆனால் அது வெறும் சௌகரியத்தைக் கொடுக்குமேயொழிய நிலைத்த சுகத்தைக் கொடாது. மாறாத இன்பம் தூய வாழ்விலும், பரஸ்பர ஒற்றுமையிலும், பேரறிவிலும் பொருந்தியுள்ளது. பராசக்தி பூஜையில் தலையாயது பெண்ணுலகுக்குப் பெருமையளிப்பதாம். அவள் மாதர் வடிவத்தில் மேன்மையுற்று விளங்குகின்றன.
தக்ஷிணேச்வரம் பவதாரிணி 

या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमः तस्यै नमः तस्यै नमो नमः
-      (தேவி மாஹாத்மியம்)
        “சர்வ பிராணிகளிடத்திலும் மாதாவாயிருக்கின்ற தேவிக்கு நமஸ்காரம்” என்னும் அரும்பெரும் பிரார்த்தனை பிறந்த நாடு இது. ஆனால் எந்த வீடு அல்லது நாட்டினுள் ஸ்திரீ ஜாதியாருக்கு இன்பமும் மேன்மையும் இல்லையோ அந்த வீடு அல்லது நாடு விருத்தியடையாது என்ற கோட்பாட்டை ஆதியில் அறிந்ததும் இந்நாடே. இந்திய மாதர் தாழ்மையுற ஆரம்பித்ததும் நாடும் தாழ்மையுறலாயிற்று. மேல்நாட்டில் மாதரது மகிழ்வும் சமுதாயத்தின் சௌபாக்கியமும் இணை பிரியாதிருப்பது கருதற்பாலது. ஆனால் அங்கு மாதருள் மனையாட்டி முதன்மை வகிக்கிறாள்; தேக சௌந்தரியத்துக்காக அவள் சிறப்பிக்கப்படுகிறாள். இந்தியாவின் லட்சியமோ அதைவிடப் பன்மடங்கு மேலானது. இங்கு மாதர் உலகில் தாய் தலைமை வகிக்கிறாள். அவள்மீது ஏற்றப்படும் சிறப்பு அனைத்தும் கற்புக்காகவேயொழிய உடல் அழகுக்காக அல்ல. இப்போது இந்நாட்டு ஸ்திரீகள் தேசீய லட்சியத்துக்கு ஏற்ப தெய்விகத்தோடு திகழும் மாண்பை எய்துதல் அவசியம். ஆதலால் நாம் செய்யும் சக்தி பூஜையில் மாதரைப் பராசக்தியின் வடிவங்களாகப் பாராட்டி அதற்கேற்ற சீரிய ஒழுக்கத்தைக் கடைபிடித்தல் வேண்டும்.
          
ஆயுதம் இல்லாதவன் அரைமனிதன் என்று சொல்லப்படுகின்றான். ஆயுதம் உடைத்திருப்பதும் அதை முறையே கையாளுதலும் ஆண்மைக்கு அறிகுறியாகும். ஆனால் இந்நாளில் நம் நாடு செய்கின்ற ஆயுத பூஜை பரிகாசத்திற்கு உரியதாகும். துருப்பிடித்துக் கிடக்கும் பழைய கருவிகளை வருஷமொருமுறை துலக்கிச் சந்தனம், புஷ்பம் சாத்தி அலங்கரித்து வைத்து அவைகளின் எதிரே விழுந்து நமஸ்கரித்துவிட்டு மறுபடியும் அவைகளைப் பத்திரப்படுத்தி வைத்துவிடுகின்றனர். இது சக்தி பூஜையின் பெயரால் தோன்றியுள்ள போலி உபாசனையாகும். சக்தியின் உதவியை உண்மையில் நாடுபவன் வல்லவனாகின்றான். அத்தகைய வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம். ஆதலால் வல்லவனாகி ஆயுதத்தை ஒழுங்காக உபயோகிப்பவனே ஆயுதபூஜை செய்பவனாகின்றான். அத்தகையவன் வருஷம் ஒருமுறை ஆயுதத்தை அலங்கரிப்பதில் அர்த்தமுண்டு.
          
சரஸ்வதி பூஜை பண்ணும் நம் நாட்டில்தான் அக்ஞான இருள் நிறைந்து கிடக்கின்றது என்று ஒருவர் பகர்ந்ததில் பொருள்மிக நிறைந்திருக்கிறது. ஏனென்றால் வைதீக விதிப்படி நம்மவர் கலைமகளை வணங்குகின்றாரல்லர். உணவு உடலுக்கு உறுதி தருவதுபோன்று சாஸ்திரங்களின் உட்பொருள் உள்ளத்துக்கு ஒளிவிளக்காக வேண்டும். அங்ஙனமின்றி அது புஸ்தகத்தில் அடங்கியிருப்பதோடு நின்றுவிடுகிறது. அதுதான் நம்மனோர் மாட்டுள்ள குறை. ஆதலால் தினந்தோறும் கல்வி பயிலுதல் கலைமகளுக்கு உகந்த பூஜையாகும்.
          
இகபரம் இரண்டிலும் மக்களுக்கு இன்றியமையாத புருஷார்த்தங்களைப் பராசக்தி பகுத்தருளிய வண்ணமாயிருக்கின்றாள். சுவாசிக்கும் காற்றுப் போன்று அவளுடைய காருண்ய வெள்ளம் தங்குதடையின்றிப் பொங்கிக்கொண்டிருக்கிறது. உலகனைத்தையும் ஈன்றெடுத்த அன்னை உலகுக்கு வேண்டிய யாவையும் பரிவுடன் வழங்கிடக் கைதூக்கிக் காத்திருக்கிறாள். அத்தகைய அகிலாண்ட நாயகியின் அனுக்கிரக்கத்தைப் பெறவல்ல அறிவையும் ஆற்றலையும் நம்மனோர் முறையே நாடுவார்களாக.

No comments:

Post a Comment