Friday, July 22, 2011

*உதகை(கோடப்பமந்து) ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்

ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தரின் பூர்வாசிரமப் பெயர் சின்னு என்பது நாம் அறிந்ததே. இளைஞனாக இருந்த சின்னு துறவு மார்க்கத்தில் நாட்டம் கொண்டிருப்பதைப் பார்த்து ‘மகாபுருஷ் மகராஜ்’ ஸ்ரீமத் சுவாமி சிவானந்தர் பெருமகிழ்வு அடைந்தார். அப்பொழுது, பேலூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துக்கு ஸ்ரீ சிவானந்த சுவாமிகள் தலைவராக இருந்தார். சின்னுவைத் தம் சீடராக ஏற்றுக்கொண்டு பேலூர் மடத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு சின்னுவுக்கு திரையம்பக சைதன்யர் என்று நாமம் சூட்டி பிரம்மச்சரிய தீக்ஷை கொடுத்தார்.

1924 ஆம் ஆண்டு தம் குருநாதரின் அனுமதியையும், ஆசியையும் பெற்று திரையம்பக் சைதன்யர் தென்னாட்டில் யாத்திரை மேற்கொண்டார். ஸ்தல யாத்திரை முடித்தபின் திரையம்பக சைதன்யர் பேலூர் மடம் சென்று தம் குருநாதரைச் சந்தித்தார். தம் குருநாதரிடம் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை எல்லாம் எடுத்துக்கூறினார். அப்பொழுது ஸ்ரீமத் சிவானந்த சுவாமிகள் உடல் நலம் குன்றி இருந்தார். தென்னாட்டிலுள்ள நீலகிரி சிறந்த மலை வாசஸ்தலம் என்றும் அங்கு சில நாட்கள் அவர் தங்கியிருப்பது உடலுக்கு நலம் தரும் என்றும் திரையம்பக சைதன்யர் தம் கருத்தை குருநாதரிடம் தெரிவித்தார். குருநாதரும் அதற்கு ஒத்துக்கொண்டார். திரையம்பக சைதன்யர் செங்குட்டைப்பாளையத்திலுள்ள தம் குடும்பத்தினருக்கு “என் குருநாதர் மலைவாசம் செய்யும் பொருட்டு நீலகிரியில் தங்கியிருக்க விரும்புகிறார். அவர் தங்கியிருக்க இடவசதி செய்து தர வேண்டும்.” என்று ஒரு கடிதம் எழுதினார். அப்பொழுது குடும்பத்தை நடத்தி வந்த திரு. ரத்தினசபாபதி குன்னூரில் தங்களுக்குச் சொந்தமாயிருந்த எஸ்டேட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். திரையம்பக சைதன்யர் தம் குருநாதருடன் அங்கு வந்து சில நாள் தங்கியிருந்தார்.

திரையம்பக சைதன்யரும் அவருடைய குருநாதரும் இப்பொழுது உதகமண்டலத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துக்கு எதிரில் அமைந்திருந்த ஓய்வு இல்லம் ஒன்றில் தங்குவதற்கு ஏற்பாடாயிற்று. குன்னூரிலிருந்து புறப்பட்டுச் சென்று அங்கு சில நாட்கள் இருவரும் தங்கியிருந்தார்கள்.

நீலகிரியின் இயற்கை அழகு ‘மகாபுருஷ் மகராஜ்’ சிவானந்த சுவாமிகளுடைய உள்ளத்துக்கு மிகவும் ரமணியமாக இருந்தது. நீலகிரியில் ஓர் ஆசிரமம் உருவாகுமானால் ஆத்ம சாதகர்களுக்கு அது மிகவும் உதவியாக இருக்கும் என்று அவர் சங்கல்பம் செய்தார்.

ஒரு நாள் காலை அவர் நீலகிரியின் இயற்கை அழகைக் கண்டு ரசித்த வண்ணம் அங்குள்ள சோலைகளின் வழியாகப் போய்க்கொண்டிருந்தார். அவருடன் சென்ற அன்பர்களோடு உதகையில் ஆஸ்ரமம் அமைப்பதைப் பற்றி ஆலோசனை செய்துகொண்டே போனார். அப்பொழுது அவர்களுக்கு எதிரே ஒருவர் தென்பட்டார். அவர் தம் பெயர் திருவேங்கடம் என்றும் உதகைக்குப் பக்கத்தில் உள்ள கீழ்கோடப்பமந்து என்னும் இடத்தில் தாம் வாழ்ந்து வருவதாகவும், தாம் சலவைத் தொழில் செய்து வருவதாகவும் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார். அன்பர்கள், “காளிதேவியின் காட்சி பெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அத்யந்த சீடர்களில் இந்த சுவாமி ஒருவர்” என்று சுவாமியைத் திருவேங்கடத்துக்கு அறிமுகப் படுத்தினார்கள். திருவேங்கடம், “எங்கள் குலதெய்வம் காளிகா தேவியாவாள். ஓர் ஆண்டுக்கு முன்பு எங்கள் குல தெய்வம் என் கனவில் தோன்றிக் கோவிலுக்குப் பக்கத்திலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தைத் தன் பக்தர்களுக்குக் கொடுக்க வேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறாள். அவ்வாணைப்படி அந்நிலத்தை இந்த சுவாமிகளிடம் ஒப்படைக்க நான் முடிவு செய்துவிட்டேன்” என்று கூறினார். இதைக் கேட்டதும் ஸ்ரீமத் சிவானந்த சுவாமிகள் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் திட்டத்தை அறிந்து ஆனந்தக்கண்ணீர் வடித்தார். இறைவனுடைய திட்டம்தான் பெரியோர்களுடைய சங்கல்பமாக வருகிறது என்பதற்கு இந்நிகழ்ச்சி சிறந்த சான்றாகும்.

1924 – ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருவேங்கடம் அளித்த இடத்தில் புதிய ஆஸ்ரமம் கட்டுவதற்கு ‘மகாபுருஷ் மகராஜ்’ அவர்கள் கால்கோள் நாட்டினார்கள். இரண்டு ஆண்டுகளில் ஆஸ்ரமக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஆஸ்ரமம் கட்டுவதற்குத் திரையம்பக சைதன்யரின் குடும்பத்தினர் பலவகையிலும் உதவியாக இருந்தார்கள். 1926 – ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் ‘மகாபுருஷ் மகராஜ்’ ஸ்ரீமத் சிவானந்த சுவாமிகள், அவர் தம் திருக்கரங்களால் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ சாரதா தேவியார், ஸ்ரீ விவேகானந்தர் ஆகிய மூவர் படங்களையும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்தார். அன்று, அவ்விழாவுக்கு மக்கள் திரளாக வந்திருந்தனர்.

No comments:

Post a Comment